"நிலங்களைக் கையகப்படுத்துதல் அல்ல எமது போரின் குறிக்கோள்!
புலிகளைப் பலவீனம் செய்வதே அதன் உண்மையான எண்ணமாகும்" என் கொழும்பு வார இதளுக்கு பகருகிறார், கோத்தபாயா.
கொழும்பு வார ஏடு ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:
முன்னைய ஈழப் போர்களின் போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இராணுவ உத்தி என்பது இராணுவத்தினர் தொடர்பானது. இராணுவத்தினருக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். இராணுவ உத்தியை வகுப்பது என்பது முற்றாக முப்படைகளின் தளபதிகளிடம் உள்ளது. மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட உடன், நிலைமைகளை முழுமையாக ஆய்ந்து உத்திகளை வகுத்தோம். இராணுவ உத்திகளில் எதுவித அரசியல் தலையீடும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இராணுவத்தினரை முப்படைகளின் தளபதிகளே கையாளுவதால் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. முதல் முறையாக தற்போதைய முப்படைகளின் தளபதிகளும் முன்னைய பாரிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இராணுவத்தின் மிகக் கீழ் நிலையினரைக் கூட இராணுவ உத்தியில் பங்கேற்க வைத்துள்ளோம்.
முன்னைய இராணுவ நடவடிக்கைளின் மூலம் தற்போதைய இராணுவ தளபதி, எதிரிகளின் வியூகம், எதிரிகளின் இருப்பிடம் ஆகியவற்றை நன்கு அறிந்து வைத்துள்ளார். களத்தை நன்கு கற்றவர். எதுவிதத் தலையீடும் இல்லாமல் இராணுவம் தனது வளங்களைப் பயன்படுத்த அனுமதித்திருக்கிறோம். இத்தகைய அணுகுமுறையால் நல்ல வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம். உதாரணமாக கிழக்கை எடுத்துக் கொண்டால் முன்னரை விட எதிரிகளின் ஆயுதங்களை பெருமளவில் நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு இழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறோம். கடந்த 3 மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உடல்களை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம். விடுதலைப் புலிகள் பெரும் எண்ணிக்கையில் சரணடைந்தும் வருகின்றனர். முன்னரை இதுவிட மாறுபட்ட நிலைமைகளையே இது எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் சிறந்த நிர்வாகம், சிறந்த தந்திரோபாயம், சிறந்த தலைமைத்துவமே காரணம். அதனாலேயே நமக்கு இழப்புகளும் குறைவு.
நாம் டாங்கிகளை இழக்கவில்லை- வானூர்திகளை இழக்கவில்லை- இராணுவத்தினரை இழக்கவில்லை என்று பல இராணுவ அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டுணர்வு அதி உயர்வானது. அத்தகைய உயர்ந்த கட்டுப்பாட்டுணர்வு இருக்கும் நிலையில் நாம் நல்ல முறையில் இயங்க முடியும். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுணர்வை நீடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. எவர் ஒருவரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுணர்வை- மன உறுதியைச் சீர்குலைக்கக் கூடாது. இதுவிடயத்தில் நாம் கவலை கொள்கிறோம். நீங்கள் இராணுவத்தினரினது மன உறுதியை சீர்குலைத்தால் இராணுவத்தினர் தங்களது உயிரைக் கொடுக்க நேரிடும் என்பதை நீங்கள் நினைவு கொள்ளுங்கள். எப்போது இராணுவ வீரரின் மன உறுதியை நீங்கள் சீர்குலைக்கிறீர்களோ அப்போது நம்பிக்கையோடு எதிரிக்கு முகம் கொடுக்க முடியாது போய்விடும். எப்போது மன உறுதியோடும் கட்டுப்பாட்டுணர்வோடும் நிற்கிறானோ அப்போது நம்பிக்கையோடு எதிரியை எதிர்கொள்வான். ஆகையால் சில்லறை இலாபங்களுக்காக அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட எவருமே இராணுவத்தினரின் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் சீர்குலைக்க வேண்டாம்.
இராணுவம் சுதந்திரமாக இயங்கும் அதே நேரத்தில் அரசியல் ரீதியாக நாட்டுக்குத் தலைமை வகிக்கும் அரச தலைவருக்கு இராணுவ உத்தி தெரியாது. ஆகையால் அவர் தலையிடாமல் இருக்க வேண்டும். முப்படைகளின் தலைவராக இருக்கும் அரச தலைவர் வழிகாட்டுதல்களை மேற்கொண்டாலும் போர் நடவடிக்கைகள், ஆட்சேர்ப்பு, உத்திகள் அனைத்துமே இராணுவத்தினரிடம்தான் இருக்க வேண்டும்.
இந்த நாட்டை ஒரு பயங்கரவாத இயக்கம், பிளவுபடுத்தி அறவிடுதலை அனுமதிக்க முடியாது. நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அரச தலைவரின் கடமை. அதற்காகத்தான் மக்கள் அவரைத் தெரிவு செய்துள்ளனர். பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறிலங்காவின் இராணுவச் செலவு அதிகம் இல்லை. இராணுவத்துக்கு மிகக் குறைவாக செலவு செய்து அதிக அபிவிருத்தியைப் பெறுவதுதான் நாட்டுக்கு நன்மையானது. அதே நேரத்தில் அண்மைய அனைத்துலக நடப்புகளைப் பார்த்தால் ஒவ்வொரு நாடுமே தனது பாதுகாப்பு குறித்து கவலை கொள்கிறது. உலகம் முழுவதும் கொடிய பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்களிடையே வேறுபாடு ஏதும் இல்லை. அவர்கள் ஒரு நாட்டின் இராணுவச் செலவுகளை மட்டும் அதிகரிக்கச் செய்யவில்லை. பொருளாதார ரீதியாகவும் பெரும் நாசம் செய்கின்றனர். காப்பீடுகள், கடனுதவிகள் என அனைத்துலக அமைப்புகளையும் நெருக்கடிகளுக்குள்ளாகின்றனர். இந்தச் சூழ்நிலைகளினால் நாம் நமது நாட்டின் பாதுகாப்பு குறித்து அலட்சியமாக இருந்துவிட முடியாது. நமது நாட்டின் பாதுகாப்பை நாம் தியாகம் செய்துவிட முடியாது.
இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்து அனைத்துலகிலிருந்து சிறிலங்காவை தனிமைப்படுத்த விடுதலைப் புலிகள் முயற்சிப்பதை நாங்கள் புத்திப்பூர்வமாக கையாளுவோம். ஆனால் அதற்கு முன்னர் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது. ஏனெனில் வரலாறு அதனையே நமக்குக் காட்டியுள்ளது. எத்தனை அரச தலைவர்கள்- எத்தனை தலைவர்கள் இதுவிடயத்தில் இறங்கியிருக்கிறார்கள். கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.
பிரபாகரனின் மனநிலையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர் வளையாத மனிதர்.
தனியரசு என்பதைத் தவிர வேறு எந்த ஒரு வார்த்தையையுமே ஒப்புக் கொள்வதாக அவர் சொன்னதே இல்லை.
நமது தலைவர்களை அவர் தவறாகப் புரிய வைத்திருக்கிறார். அதே நேரத்தில் தனது சவாரிக்காக வெளிநாட்டுத் தலைவர்களை பிரபாகரன் கையாளுகிறார்.
இதனை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் எதனையும் மூடி வைத்திருக்கவில்லை. பேச்சுவார்த்தைகளுக்காகவும் அரசியல் தீர்வுகளுக்காகவுமான கதவுகள் திறந்தே இருக்கின்றன. என்ன சொல்ல வருகிறேன் எனில், பிரபாகரன் அனைத்து நேரங்களிலும் என்ன செய்வார் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.
எப்பொழுதெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திர ரீதியாக அழுத்தங்கள் வருகின்றதோ அப்போதெல்லாம் சிறிலங்கா அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு பிரபாகரன் தள்ளிவிடுகிறார். ஆகையால் விடுதலைப் புலிகளின் மனோநிலையை புரிந்து கொள்வது என்பது முக்கியமானது. அந்த உத்தியை வீழ்த்துவதை விட அறிவாளித்தனமாக எதிர்வினையாற்ற வேண்டும்.
உதாரணமாக, இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளின் மீது அரசாங்கம் அழுத்தங்களைத் தருகின்றபோது, மனித உரிமைகள் விடயத்தை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்கிறார். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அரசியல் கட்சிகள், அனைத்துலக ஊடகங்கள் கண்களையும் காதையும் திறந்துவைத்துக் கொண்டு பிரபாகரன் மீண்டும் மீண்டும் பின்னுகிற இந்தச் சுற்றாடலில் சிக்காமல் நிலைமைகளை ஆராய வேண்டும்.
நம்முன் உள்ள ஒரே வழி தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தி பேச்சு மேசையில் அவர்களை உட்கார வைப்பதுதான். ஒவ்வொருவருமே இதற்காக முயற்சிக்கின்றனர். பிரபாகரனோ வெவ்வேறான உத்திகளினூடாக, அரசாங்கத்தின் மீது மீண்டும் மீண்டும் அழுத்தங்களைச் செலுத்த விரும்புகிறார். அதனூடே இராணுவ ரீதியாக வலுப்பெற நினைக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் என கண்டிப்பான ஒரு காலவரறையை வைக்க முடியாது. ஆனால் அதனை எப்படிச் செயற்படுத்துவது என சில திட்டமிடல்களை வைத்திருக்கலாம். கிழக்கைப் பார்த்தால் மீள கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். ஆனால் அதுவல்ல இலக்கு. அந்தப் பகுதியின் மீதான நமது உரிமையை எப்படி நீட்டித்து வைப்பது என்பதும் உரிய சட்டம் ஒழுங்கை அங்கு உருவாக்கி அபிவிருத்திகளை மேற்கொள்வதும்தான் முக்கியமானது. அங்கு அரசியல் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அபிவிருத்திகளைத் தொடங்க தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் நமது முழு கட்டுப்பாட்டில் அது உள்ளதாக பார்க்க முடியும். அங்கு தேர்தல் நடத்துவது என்பது அரசியல் முடிவு. அது தொடர்பில் கருத்து கூற முடியாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னர் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, மட்டக்களப்பு மற்றும் வவுனியா என பரவியிருந்தனர். இராணுவத் தளபதிகளும் தங்களது இராணுவத்தினரை உத்திப்பூர்வமாக நகர்த்தினர். பல உத்திகள் உள்ளன. வன்னியை எடுத்துக் கொண்டால் தளபதிகள் வித்தியாசமான உத்தியைக் கையாளுவர். ஏற்கெனவே அவர்கள் கையாண்டதில் நம்பிக்கையிருப்பதால் அதனையே கையாளுகின்றனர்.
நமது இராணுவத்தினர் மீது எமக்கு முழு நம்பிக்கை உள்ளது. சந்தேகம் எதுவுமே இல்லை. அவர்களும் நம்பிக்கையோடு உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் இராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. கிழக்கைக் கைப்பற்றியுள்ளனர். வடக்கை கைப்பற்றியுள்ளனர். வன்னியில் மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். திட்டமிட்டபடி சரியாக செய்து வருகின்றனர்.
ஒரு பயங்கரவாத இயக்கம் 30 ஆண்டுகாலம் போராடி வருகிறது. அந்த இயக்கத்துக்கு ஆயுதங்கள் பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு ஒரு சரியான தொடர் வலைப்பின்னல் உள்ளது. 30 ஆண்டுகளாக நீடித்திருக்கும் ஒரு பயங்கரவாத இயக்கத்துடன் நாம் போரிட்டு வருகிறோம்.
வன்னிச் சமரில் அழிவு ஏதும் நமக்கு ஏற்படவில்லை. நாம் மீண்டும் வெற்றியீட்டியுள்ளோம். வன்னியில் நிலங்களை மீட்பது நமது நோக்கமும் அல்ல. விடுதலைப் புலிகளுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்த வேண்டும். எதற்காக வன்னிச் சமரில் அழிவு ஏற்பட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள் எனத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பாரிய இழப்புகளுக்கு நாம் காரணமாக இருந்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாக நமது இலக்கான அவர்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.
வன்னியில் மோர்ட்டார் குண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததில்தான் ஆயுதக் களஞ்சியம் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது.
தற்போதைய நிலையிலிருந்து 11 கிலோ மீற்றர் முன்னால் நாம் உள்ளோம். முன்னரங்க நிலையிலிருந்து குறிப்பிட்ட பிரிவினர் வந்திருக்கின்றனர். அதற்காக இழந்துவிட்டோம் என்பது அல்ல. அது ஒரு உத்தி.
உண்மையில் வன்னியை கைப்பற்றுவதில் விருப்பம் இல்லை. அது நடைமுறைச் சாத்தியமும் இல்லை. நாம் விடுதலைப் புலிகளின் பலத்தை போராளிகளை- சொத்துகளை- தளங்களை பலவீனப்படுத்த வேண்டும். அதனைத்தான் வன்னியில் நாம் செய்திருக்கிறோம்.
உண்மையான நிலைமையைப் புரிந்து கொள்ளாமலும் தளபதிகளின் திட்டங்களை அறிந்துகொள்ளாமலும் மக்களுக்குத் தவறான தகவல்களை சில ஆய்வாளர்கள் தருகின்றனர். அரச தலைவரின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தனிப்பட்ட விடயமாக நினைக்கக் கூடாது. நாட்டின் பிரச்சனையாகத்தான் கருத வேண்டும். பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க நாடு ஒத்துழைக்க ஏண்டும். பயங்கரவாதத்தைத் தோற்கடித்து விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த மக்கள் ஆதரவளிக்க வேண்டும். ஒவ்வொருவரும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற அரசியல் உள்ளிட்ட இதர கருத்து மாறுபாடுகள் இருக்கலாம்- பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டில் அமைதியை நிலைநிறுத்த மக்கள் ஆதரிக்க வேண்டும்.
வடக்கில் போர் நடத்த இராணுவத்துக்கு விருப்பம் இல்லை என்று அண்மையில் இராணுவத் தளபதி கூறியிருந்தார். நானும் அதனைத்தான் கூறுகிறேன். அதற்கு அர்த்தம் என்னவெனில் நிலங்களைக் கைப்பற்றுவதில் இராணுவத்துக்கு விருப்பம் இல்லை. புலிகளை பலவீனப்படுத்தவே விருப்பம். அவர்களை பேச்சு மேசைக்குக் கொண்டு வர வேண்டும்.
5 மிக் 29 வானூர்திகளுக்காக 75 மில்லியன் டொலரை சிறிலங்கா அரசாங்கம் செலவு செய்துள்ளதாக எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்? வான் படையின் தேவை என்னவோ வான் படையின் பாதுகாப்பு என்னவோ அதனடிப்படையிலே கொள்வனவை இறுதி செய்வோம்.
கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விடயம் ஒட்டுமொத்தமாகவே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. உண்மை நிலைமையை வெளிப்படுத்த நாங்கள் தவறியிருக்கக் கூடும். எந்த ஒரு செயற்பாட்டையும் நீதிமன்றின் முன்பாக விவாதித்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்துக்கும் காவல்துறைக்கும் உதவுகிறேன். அது ஒரு குற்றமெனில் அதனையே நான் செய்வேன். அதற்கு அப்பால் வேறு எந்த ஒரு குற்றமும் நான் செய்யவில்லை. ஆனால் ஏன் என்னை எல்லோரும் தாக்குகின்றனர் எனப் புரியவில்லை.
விடுதலைப் புலிகள் என்னைக் கொல்லப் பார்க்கின்றனர். உளவுத்துறையின் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகள் முதல் இலக்கு நான் தான். இப்போது அரசியல்வாதிகளும் என்னை இலக்கு வைத்துள்ளனர். ஏன் என்றுதான் தெரியவில்லை. ஆனால் மக்கள் என்னை ஆதரிக்கின்றனர். மின் அஞ்சல்கள் மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நான் மிகவும் நேர்மையான மனிதன். இராணுவத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது எனது இலக்குகளில் ஒன்று. ஆயுதக் கொள்வனவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் ஆயுதக் கொள்வனவு வெளிப்படையானதுதான் என்பதை உறுதியாக என்னால் கூறமுடியும். இடைத்தரகர் இல்லாமல் - மூன்றாம் நபர் இல்லாமல் அரசாங்க நிறுவனமே ஆயுதக் கொள்வவு செய்து வருகிறது.
யாரேனும் ஒருவர் நான் இந்த ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தங்களின் மூலமாக ஒரே ஒரு ரெட் செண்ட் பெற்றதாக நிரூபித்தாலும் பதவி விலகுதல் மட்டுமல்ல. வாழ்வதற்கும் நான் விரும்பவில்லை. நான் மிகவும் கௌரவமான மனிதன். எவர் வேண்டுமானாலும் விருப்பபட்டால் விசாரணை செய்து கொள்ளட்டும். நான் மிகவும் மத நம்பிக்கை கொண்டவன். கர்மா மீது எனக்கு நம்பிக்கை உண்டு.
நான் ஐக்கிய நாடுகள் சபையை குற்றம்சாட்டியதாகக் கூறுவது தவறு. 30 ஆண்டுகளாக செயற்படும் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். உள்ளுர் சக்திகள் மூலம் அனைத்து இடங்களிலும் விடுதலைப் புலிகள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை இதுவிடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றுதான் கூறினேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளைக் கையாளுவதைப் போல் எங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் கையாளக்கூடாது.
விடுதலைப் புலிகள்- பயங்கரவாத இயக்கம். நாங்கள் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் எங்களுக்குத்தான் அவர்கள் உதவ வேண்டும். அந்த பயங்கரவாதத்தின் ஆணிவேரை அகற்ற எங்களுக்கு உதவ வேண்டும். அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் குற்றம்சாட்டும் சமநிலையைக் கையாளக் கூடாது.
அதேபோல் கொழும்பு கடத்தல்களை ஒப்புக்கொண்டதாக நான் கூறிய விடயத்திலும் உண்மை ஏதும் இல்லை. கடத்தல் சம்பவங்களை நான் எதிர்க்கிறேன். கடத்தல்கள் என்பதும் இராணுவ நடவடிக்கைகள் என்பதும் வெவ்வேறானது. இரண்டையும் சிலர் சமமாகப் பார்க்கின்றனர்.
கடத்தல்கள் என்பது நடக்கின்றனதான். அதனால்தான் நாம் நிறுத்த முயற்சிக்கிறோம். அதே நேரத்தில் அது ஒரு மறைமுக இராணுவ நடவடிக்கை அல்ல. ரணில் தவறாக சொல்கிறார். இராணுவம் சில உளவுரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதனை கடத்தல் என்றால் அது தவறு என்றுதான் நான் கூறினேன். (What I am saying is, when the military conducts some intelligence operations and if you try to call them abductions, it is wrong).
கொழும்பில் தனிப்பட்ட இலாபங்களுக்காக நடக்கும் கடத்தல்கள் தவறானது என்று கோத்தபாய அதில் கூறியுள்ளார்.
<நன்றி புதினம்>