Friday 12 September 2008

இந்தியாவிடம்கூட இல்லாத பலம் தங்களிடம் என்கிறது திவயின!

சக்தி வாய்ந்த ஏவுகணைப்பலம் இந்தியாவிடம் இல்லை


கடந்த காலங்களில் யுத்தம் தீவிரமடைந்த நிலையில் சிறிலங்கா அரசு அரச படையினரின் யுத்த நடவடிக்கைகளுக்காகப் பல்வேறு அத்தியாவசியமான நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்துவருகிறது. இவ்வாறு சில மாதங்களின் முன்னர் செக்கோஸ்செலவக்கியா நாட்டிலிருந்து யுத்த களத்தில் தீவிர தாக்குதல்களுக்காகப் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த கிராட் ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்காக சிறிலங்கா அரசு செக்கோஸ்செலவக்கியா அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தது.
இதையறிந்த புலிகள் இயக்கம் உடனடியாக ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் பிரதிநிதிகள் பிரமுகர்கள் மூலமாக இந்த கிராட் ஏவுகணைகளின் கொள்வனவைத் தடுப்பதற்கு பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டது. இவ்வாறு ஒரு நாடுகளிலிருக்கும் புலிகளுக்குச் சார்பான பிரபல அரசியல்வாதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த புலிகள் இயக்க ஆதரவாளர்கள் மூலமாகவும், அத்துடன் சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகளுக்கெதிராக எதிர்ப்பைத் தெரிவித்தும் இவ்வாறு பல வகையிலும் செக்கோஸ்செலவக்கியா அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிறிலங்காவுக்கு கிராட் ஏவுகணைகள் வழங்கப்படுவதைத் தடுக்க உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் சிறிலங்கா அரசு ஏனைய நாடுகளிலிருந்து ஆயுதங்கள் வாங்குவதையிட்டு பொதுவாகவே அதிருப்தியடையும் அண்டைய நாடாகிய இந்தியாவும், மேற்படி கிராட் ஏவுகணைகளை செக்கோஸ்செலவக்கியாவிலிருந்து சிறிலங்கா அரசு வாங்குவதையிட்டு எதிர்ப்பு நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியது. இந்நிலையில் இந்திய அரசும் இவ்வாறு சிறிலங்காவுக்கு செக்கோஸ்செலவக்கியா அரசு கிராட் ஏவுகணைகள் வழங்குவதைத் தடுக்க மறைமுகமாக முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டன. ஆயினும், புலிகள் இயக்கத்தின் மேற்படி ஆதரவு வட்டாரங்களின் முயற்சிகளோ அல்லது வேறு நாடுகளின் அரசு சார்ந்த முயற்சிகளோ பயனளிக்கவில்லை. சிறிலங்காவுக்கு கிராட் ஏவுகணைகளை வழங்குவதென்று தீர்மானத்தை செக்கோஸ்செலவக்கியா அரசோ அல்லது பாதுகாப்புத் துறையோ மாற்றவில்லை. இதன் பயனாக அண்மையில் கிராட் ஏவுகணைகளை சிறிலங்கா அரசு பெரும் எண்ணிக்கையில் செக்கோஸ்செலவக்கியாவிலிருந்து பெற்றது. தற்போது இந்த கிராட் ஏவுகணைகளை வன்னி யுத்த நடவடிக்கைகளில் அரச படையினர் பயன்படுத்தி வருவதாகவும், இந்த கிராட் ஏவுகணை பலம் முன்னர் புலிகள் இயக்கத்தினர் ஆணையிறவு மீது தாக்குதல் மேற்கொண்டபோது அரச படையினரிடம் இருக்கவில்லை எனவும் இருந்திருந்தால் புலிகள் இயக்கத்தின் ஆணையிறவுத் தாக்குதலை முற்றாக முறியடித்திருக்கலாம் எனவும் உயர் மட்ட இராணுவத் தரப்பு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு யுத்தகளத்தில் தீவிர யுத்த நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணை வகைகளில் கிராட் ஏவுகணைகள் மிகக் கூடுதலான தாக்குதல் பலம் வாய்ந்தவை எனவும், இவ்வாறான கிராட் ஏவுகணை பலம் இந்தியாவிடம் கூட கிடையாது எனவும் மேற்படி இராணுவ உயர் மட்ட தகவல் வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளன.

திவயின: 7.09.2008 (தினக்குரலில் இருந்து)

No comments: