தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் அழைத்திருக்க வேண்டும்: மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி
[செவ்வாய்க்கிழமை, 5 யூன் 2007, 08:00 ஈழம்] [பா.பார்த்தீபன்]
ஆழிப்பேரலை அனர்த்தத்துக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரசெல்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக்குழுவின் கூட்டம் தொடர்பாக கவனத்தைச் செலுத்தியிருக்கும், விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், தமிழ்ப் பிரதிநிதிகள் பங்குகொள்ளாத இது போன்ற கூட்டமொன்று பயனுள்ளதாகவோ முழுமையானதாகவோ இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கின்றது.
இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் ஒன்றுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்திக்குழு அழைத்திருக்க வேண்டும் என இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி, கடுமையான மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டு, அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களையும் மீறிவரும் சிறிலங்கா அரசாங்கம் தமது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக இதற்கு அழைக்கப்பட்டிருக்கின்ற அதேவேளையில், பாதிக்கப்பட்டவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளுக்குத் தன்னுடைய ஆதரவை வழங்கியதுடன், களநிலைமைகளின் யதார்த்தங்களையும் அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியம், ஆழிப்பேரலைக்குப் பின்னரான நிலைமைகளையும், மனித உரிமைகள் நிலவரத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமானால் எதிர்காலத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளையும் அழைப்பது அவசியமாகும்.
ஆழிப்பேரலையால் தாக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். ஆனால், ஆழிப்பேரலைக்குப் பின்னரான திட்டங்களில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். 40,000 பேர் கொல்லப்பட்ட அதேவேளையில், 6,00,000 பேர் தமது வாழ்வாதாரங்களை இழந்து அகதிகளானார்கள்.
பல்வேறு அமைப்புக்களும், உள்ளுர் தலைவர்களும் இந்த இடம்பெயர்ந்தவர்களினதும் மற்றும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களினதும் துன்பங்கள் தொடர்பாகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்கள்.
வடபகுதியில் 3,50,000-க்கும் அதிகமானவர்கள் வடபகுதியிலுள்ள முகாம்களில் தொடர்தும் இருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா படையினர் முன்னெடுத்துவரும் தாக்குதல்கள் காரணமாக அங்குள்ள இடம்பெயர்ந்தவர்கள் யுத்த நிலைமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அனைத்துலக கண்காணிப்பின் மூலமாகவே மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும், மனிதாபிமானச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்திருக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகப்பு மின்னஞ்சல் உங்கள் கருத்து அச்சுப் பிரதி
புதினம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Post a Comment