Monday 25 June 2007

பொம்மை ராடர்களை வளங்கி தேற்ற நினைத்த இந்தியாவுக்கு, சிங்களம் உண்மை ராடர்களை வாங்கிப் பதிலடி!!!

வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் வகையிலான ஜே.வை-11 என்ற முப்பரிமாண ராடாரை சிறிலங்காவுக்கு சீனா வழங்கியுள்ளதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பு சிங்கள ஊடகமான "லக்பிம" வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
சீனாவின் எலெக்ரோனிக் ரெக்னோலொஜி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ஜே.வை-11 (JY-11) ரக தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறியும் முப்பரிமாண ரடார்களையும் அரசு கொள்வனவு செய்துள்ளது. இந்த ராடார்களை கொள்வனவு செய்வதற்கு அரசு கடந்த ஆண்டு கொள்வனவு பத்திரத்தை சமர்ப்பித்ததுடன் முற்பணத்தையும் செலுத்தியிருந்தது.
எனினும் சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் தொடர்பாக இந்தியா கவலை தெரிவித்ததனால் அது கைவிடப்படடிருந்தது. ஜே.வை-11 ரடார் தொகுதி எஸ்- அலைவரிசை (S-Band) கொண்டது.
இது தாழ்வாக பறக்கும் வானூர்திகளைக் கண்டறியக்கூடியதுடன் அது தொடர்பான தகவல்களை வான் பாதுகாப்பு தொகுதிக்கும் வழங்கக்கூடியது.
இதனை வவுனியாவில் பொருத்தினால் அது தமிழ்நாட்டில் உள்ள வானூர்திகளின் நடமாட்டத்தையும் கண்டறியக் கூடியது. ஜே.வை-11 ராடார்கள் மூன்று நகர்த்தக்கூடிய பகுதிகளைக்கொண்டது.
எனவே விரைவாக பொருத்தக்கூடியதும் பிரிக்கக்கூடியதுமாகும்.
5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ராடார் தொகுதி 160 கி.மீ தூரவீச்சு கொண்டது. இந்த ராடார்கள் விரைவில் சிறிலங்காவை வந்தடைய உள்ளன, அதனை நிறுவுவதற்கான ஆயத்த வேலைகளை சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்டுள்ளனர். கடந்த மே மாதம் அமெரிக்காவின் நிபுணர்கள் சிறிலங்காவிற்கு வந்த போது வான் படையினர் தமது எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளில் வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகளை பொருத்துவது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தியிருந்தனர். அமெரிக்க தயாரிப்பான வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஸ்ரிஞ்சர் ஏவுகணைத் தொகுதியே (Hellfire missile system) எம்ஐ-24 உலங்குவானூர்திகளில் பொருத்துவதற்கு மிகவும் செயற்திறன் மிக்கது என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
மேலும் கட்டுநாயக்க வான்படை தளத்தில் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நடைபெற்ற 3 மாதத்தின் பின்னர் வான் பாதுகாப்பு பொறிமுறை இயங்க ஆரம்பித்துள்ளது. ராடாருடன் இணைக்கப்பட்ட வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் முக்கியமான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. முக்கியமான படை நிலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் இலகுரக வானூர்திகள் கட்டுநாயக்கா வான்படை தளத்தின் மீது குண்டுகளை வீசிய போது இந்த துப்பாக்கிகள் எதுவும் இயங்கவில்லை. தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறிய என கொள்வனவு செய்யப்பட்ட இந்திரா-02 ரக ராடார்கள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பாதுகாப்பு குறைபாடுகள் வான் பாதுகாப்பு தொடர்பான முழுமையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தேவையை வான்படைக்கு ஏற்படுத்தியிருந்தது. முன்னறிவிக்கும் பொறிமுறை, சுடுவலு கட்டுப்பாட்டு தொகுதி போன்றன முழுமையான மறு சீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. சிறிலங்கா வான் படையினரின் தேவைகளுக்குரிய பரிந்துரைகளை வழங்குவதற்கென அமெரிக்க மற்றும் இந்திய நிபுணர்கள் குழுவும் சிறிலங்காவிற்கு வந்திருந்தது. இராணுவ முக்கியத்துவமுள்ள பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள ராடாருடன் இணைக்கப்பட்ட வான் எதிர்ப்பு துப்பாக்கிகளின் திருத்த வேலைகளே இங்கு முதன்மையாக கருதப்பட்டது. தற்போது அவற்றில் பல திருத்தப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வான் பாதுகாப்பு சாதனங்கள் ராடாருடன் இணைக்கப்பட்டுள்ளன, இந்த ராடார்களின் வானூர்திகளை கண்டறியும் தூரவீச்சு 32 கி.மீ ஆகும். இந்த வான் எதிர்ப்பு சாதனமானது சுயமாகவே இலக்கை நோக்கி வான் எதிர்ப்பு சாதனத்தை இயங்கவைக்க கூடியது. வான் எதிர்ப்பு சாதனங்களை மீண்டும் இயங்க வைத்துள்ளதனால் அனைத்துலக வானூர்தி நிலையத்தை எதிர்வரும் ஜூலை 1 ஆம் நாளில் இருந்து இரவில் இயங்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

<நன்றி புதினம்>

No comments: