Tuesday, 5 June 2007

அப்பாவி இரத்தங்களோடு அரசபோர்த்தந்திரம்

குடாநாட்டில் ஆயுதபாணிகள் அட்டகாசம் 4 பொது மக்கள் சுட்டுக் கொலை
[05 - June - 2007] [Font Size - A - A - A]
யாழ்.குடா நாட்டில் நேற்று திங்கட்கிழமையும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் தபாலதிபர் ஒருவர் மற்றும் இரு சகோதரர்கள் உட்பட நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை சாவகச்சேரியில் தபாலதிபரும் நேற்று நண்பகல் யாழ்நகரில் மூன்று இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் சாவகச்சேரி வங்களாவடி வீதியில் சென்று கொண்டிருக்கையிலேயே தபாலதிபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளொன்றில் இவர்களைப் பின் தொடர்ந்து வந்த ஆயுத பாணிகளே, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தபாலதிபருக்கு அருகில் வந்து அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதனால் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சங்கத்தானையில் வசித்துவந்த தபாலதிபரான சுப்ரமணியம் சாந்தீபன் (வயது 30) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.
இவரது உடல், சம்பவம் நடைபெற்ற நேரத்திலிருந்து நேற்று நண்பகல் 12 மணி வரை அந்த இடத்திலேயே கிடந்துள்ளது.
இதேநேரம், நேற்று நண்பகல் 12 மணியளவில் யாழ்நகரில் கோயில் வீதியில் ஆயுத பாணிகளால் மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கோயில் வீதியில் ஐ.நா. அலுவலகத்திற்கும் பல சர்வதேச அரசசார்பற்ற அலுவலகங்களுக்குமிடையில் நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றில் தலைக் கவசங்கள் அணிந்து வந்த ஆயுதபாணிகள், அவ்வீதியால் மோட்டார் சைக்கிளொன்றில் வந்து கொண்டிருந்தவர்கள் மீதும் சைக்கிளொன்றில் சென்று கொண்டிருந்தவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதனால் மூன்று இளைஞர்கள் அந்த இடத்திலேயே வீழ்ந்து துடிதுடித்து இறந்துள்ளனர். இதில் இருவர் சகோதரர்களென அடையாள அட்டைகள் மூலம் தெரியவந்தது.
ஆயுதபாணிகள் கண்டபடி சுட்டபோது அவ்வீதியால் வேறுபலரும் சைக்கிளில் வந்துகொண்டிருந்ததாகவும் எனினும் அவர்கள் நிலத்தில் குதித்து தரையில் வீழ்ந்து தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பும் இராணுவ காவலரண்களுமுள்ள கோயில் வீதியிலேயே இந்த மூன்று இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், ஆயுத பாணிகள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் இலகுவாக தப்பிச் சென்றுள்ளனர்.
கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களதும் சட்டைப் பொக்கற்றுகளினுள்ளிருந்த அடையாள அட்டைகளின் படி, கச்சேரி- நல்லூர் வீதியைச் சேர்ந்த சோதிராஜா நிஷாந்தன் (27 வயது), சோதிராஜா தர்ஷன் (21 வயது) மற்றும் கட்டப்பிராய் வேளாந்தோப்பைச் சேர்ந்த சந்திரகாந்தன் சந்துரு (21 வயது) எனத் தெரியவந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக குடாநாட்டில் படுகொலைகள் குறைந்திருந்த நிலையில், இக்கொலைகள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டதாக மக்கள் பெரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.


தினக்குரல்

No comments: